×

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்து கட்ட ஒன்றிய பாஜ அரசு சதி திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட ஒன்றிய பாஜ அரசு சதி திட்டம் தீட்டியுள்ளது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றை பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி, மற்ற பிரிவினரை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

இது ஒட்டுமொத்தமாக கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் திட்டம். கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். அந்த பணியிடங்களையெல்லாம் நிரப்புமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அளித்து வலியுறுத்தினோம்.

‘பின்னடைவு காலிப் பணியிடங்களைஉடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இதற்காக கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும் நாடாளுமன்றத்தில் பதிலளித்தனர். இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஒருபுறம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பாஜ அரசால் நிறுத்தப்படுகிறது. இன்னொரு புறம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு காலி செய்யப்படுகிறது.

இது பாஜவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் மனுவாத கொள்கையின் வெளிப்பாடே ஆகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் படிக்கக் கூடாது என்பதுதான் மனுவாத சதித்திட்டம். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் ஆர்எஸ்எஸ்சின் நோக்கம். அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெற ஒன்றிய அரசை
வலியுறுத்துகிறோம்.

* ‘விளக்கம் மட்டும் போதாது’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு நேரடி நியமனங்களில் உள்ள நிலுவை காலியிடங்கள் “இட ஒதுக்கீடு விலக்கத்திற்கு” ஆளாகி பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்படாது என்ற விளக்கம் ஒன்றிய கல்வி அமைச்சகம், யு.ஜி.சி ஆகியவற்றின் டிவிட்டர் பக்கம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் மட்டும் போதாது.

எப்போது வேண்டுமானாலும் இட ஒதுக்கீட்டைப் பறிக்கலாம் என்கிற பாஜ அரசின் எண்ணத்தை நிறைவேற்றவே அது பயன்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலமே இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட துறை இடஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிடுவது சட்டவிரோதமாகும். மேலும் உடனடியாக எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்களை நிரப்ப சிறப்பு நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்து கட்ட ஒன்றிய பாஜ அரசு சதி திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,OBC ,Thirumavalavan ,CHENNAI ,SC ,ST ,VLT Party ,
× RELATED ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்...